Monday, May 21, 2007

ஏன் இந்த தளம்?

யங்கரவாதம் என்றால் என்ன? ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான எல்லாவற்றையும் பயங்கரவாதம் என்ற ஒற்றை வாதத்தில் அடக்கி ஒடுக்கும் தந்திரத்தை செயல்படுத்தி வருகிறது. இன்னொரு பக்கம் பார்ப்பனிய பயங்கரவாதம் ஆளும் வர்க்கமாக இருந்து கொண்டே தனது இருப்பை நியாயப்படுத்தும் தேவைக்காக தனது வர்க்க நலன்களுக்கு நேரெதிரானவர்களையும், மத சிறுபான்மையினரையும் பயங்கராவாதிகள் என்று முத்திரை குத்தி பீதி கிளப்புவதன் மூலமே தனது மக்கள் விரோத பயங்கரவாத நடவடிக்கைகளை மக்களின் பார்வையிலிருந்து பாதுகாத்து வருகிறது.

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழல் உருவாக்கும் சமூக பொருளாதார அழுத்தம் என்பது அதன் உண்மையான வடிவங்களில் வெளி வருவது என்பது ஆளும் வர்க்கங்களுக்கு என்றுமே ஆபத்தானதுதான். அப்படியே எங்கேனும் வந்தால் கூட அவற்றையும் பயங்கரவாத முத்திரை குத்தி வெகு சன அரங்கில் தனிமைப்படுத்தி முறியடிக்கும் தேவை தரகு வர்க்கத்துக்கு உள்ளது(Nandigram, etc).

வரைமுறையின்றி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் தரகு வர்க்க அரசியல்வாதிகளும், அதற்க்கு தரகு வேலை செய்யும் பார்ப்ப்னிய பயங்கரவாதிகளும் தமது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள தொடர்ந்து ஒரு போலியான எதிரியை உருவாக்கும் தேவை உள்ளது.

பார்ப்பனியத்தின் நலனும், ஏகாதிபத்தியத்தின் நலனும் ஒரு சில சொற்பமான விசயங்களைத் தவிர்த்து வேறு எங்கும் முரன்படவில்லை. ஆனால் இவர்கள் இருவரின் நலனும் ஒன்றிணையும் புள்ளிகள் பல உள்ளன. தொடர்ந்து பயங்கரவாத பீதியூட்டுவதன் மூலம் தமது பாசிச செயல்பாடுகளையே நியாயமானது என்ற பொதுக்கருத்தை வலுப்பெறச் செய்யும் தேவை இருவருக்கும் உள்ளது.

ஏகாதிபத்தியத்தின் தேவைக்குட்பட்டு பார்ப்பனியம் இங்கு இருக்கும் அதே வேளையில் உபரியாக பார்ப்ப்னியத்தின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்குபவர்களுக்கு எதிராகவும் இந்த பாசிச சூழலை பயன்படுத்தும் சலுகையை ஏகாதிபத்தியம் பார்ப்ப்னியத்திற்க்கு உறுதிப்படுத்துகிறது.

அதே நேரத்தில் இந்திய பாசிசமான பார்ப்பனியத்தின் சித்தாந்த அடிப்படை என்பதே ஏகாதிபத்தியத்தின் சமூக பொருளாதார சுரண்டல் வடிவத்துக்கு சேவை செய்வதாக உள்ளதும் இவர்களின் சகோதரத்துவ உறவுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

இந்த சூழலில், ஏகாதிபத்தியத்திற்க்கு சேவை செய்யும் எந்தவொரு வோட்டுக் கட்சிகளும் தவிர்க்க இயலாமல் பார்ப்பனிய நடைமுறைகளை தமது செயல்பாடுகளாக கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதன் அளவு வேண்டுமானால் வோட்டுக் கட்சிக்கு வோட்டு கட்சி மாறுபடலாம். ஆனால் பார்ப்பனியம் இன்றி ஏகாதிபத்திய சேவை இந்தியாவில் செய்ய இயலாது என்பதுதான் உண்மை.

மேலும் பார்ப்பனியம் தனது நலன்களை மட்டும் முன்னிறுத்தும் சில பத்து அமைப்புகளை கொண்டுள்ளதோடல்லாமல். தனது தேவைக்காக பிற மத, இன, சாதி ஆட்களையும் சேவை செய்ய வைக்கும் இயல்புடன் எல்லா வகை அமைப்பு வடிவங்களிலும் ஊடுருவி நிற்கிறது. சில ஆயிரம் வருடங்கள் ஆட்சியிலிருந்த பார்ப்பனியம் சமூகத்தின் அனைத்து விழுமியங்களிலும் தனது இருப்பை காட்டிக் கொள்வது ஆச்சரியமான விசயமல்ல. இதனை நேரடியாக பார்ப்பனிய கட்சிகளில் இல்லாமலேயே பார்ப்பனிய சேவை செய்யும் பிற வோட்டுக் கட்சி பயங்கரவாதிகள் அதீதமாக காணக் கிடைப்பதைக் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்.

இதே நிலைதான் ஊடகங்களிலும் நிலவிவருகிறது. ஊடகங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியம் பார்ப்ப்னியம் என்ற இந்த கூட்டணியின் நீட்சியாகவே இருக்கின்றன. இவையணைத்தும் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரி பிரச்சாரம் செய்யும் அளவு அதன் நிர்வாக இடங்களில் RSS ஆட்கள் உட்கார்ந்துள்ளனர்.

இந்நிலையில் பின்வாங்கியதாக பரவசவாத குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகளால கருதப்பட்ட பார்ப்பனியம் இன்னும் வெளிப்படையாக தனது பாசிச நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொணடு பொது அரங்கில் வெளிகாட்டி வருகிறது. இன்னொரு பக்கம் மறுகாலனிய நடவடிக்கைகளும் மிக வேகமாக ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை வேகம் பெறுகின்றன என்ற உண்மை நமக்கு நேர்மறையாக சொல்லும் விசயம் என்னவென்றால், இதற்கெதிரான மக்களின் போராட்டங்களும் வேகம் பெரும் என்பதைத்தான்.

எதிர்மறையாக நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், இவர்களின் பாசிச நடவடிக்கைகளும் வீரியம் பெற இருக்கின்றன என்பதே ஆகும். இவர்களின் பய பீதியூட்டும் கோயபல்ஸ் பிரச்சாரம் வேகம் பிடிக்கப் போகின்றன என்பதே ஆகும். பய பீதியூட்டவும், போலி எதிரியை உருவாக்கவும் தேவையான சம்பவங்கள் இனி தொடர்ந்து அடிக்கடி உற்பத்தி செய்யப்படும் என்பதே ஆகும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் போடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சி நடந்தேறி வருகிறது. எந்த வகையிலும் வோட்டுக் கட்சிகள் இவர்களின்(ஏகாதிபத்தியம், பார்ப்பனியம்) நலனுக்கு ஊறானவர்கள் இல்லை என்பதால் போடா சட்டத்தில் வோட்டுக் கட்சிகளுக்கு மட்டும் விலக்கு கொடுக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் போடா சட்டம் தனது உண்மையான இலக்காகிய ஜனநாயக, புரட்சிகர சக்திகளுக்கு எதிராக மட்டும் வேலை செய்வதை உறுதிப்படுத்துவதுடன், அதற்க்கு எல்லா பிழைப்புவாதிகளின் ஆதரவையும் உறுதிப்படுத்த இருக்கின்றன பாசிச சக்திகள்.

இந்நிலையில் ஒவ்வொரு ஜனநாயகவாதியின் கடமையாக பார்ப்பனியத்தின் முழு வடிவத்தையும் (அதன் வர்க்க சார்பு, வர்ண சார்பு, சித்தாந்த பின்புலம்) புரிந்து கொண்டு அதற்கெதிரான கருத்து பிரச்சாரத்தை, அதன் ஆணி வேரை தகர்த்தெறியும் வகையில் செய்ய வேண்டிய மிக மிக முக்கியமாக உள்ளது. மாற்று ஊடகங்களை கட்டியமைப்பதின் மூலம் இந்த் உண்மையான அதி பயங்கர பயங்கரவாதம் குறித்து வெகு சனங்களிடம் கொண்டு செல்லும் கடமை வேறு எப்போதையும் விட இன்று மிக முக்கியமானதாக முன் வந்துள்ளது.

எந்தவொரு ஊசலாட்டத்திற்கும் இடமின்றி கறாராக ஏகாதிபத்தியம்-பார்ப்பனியம் கூட்டணிக்கும், ஜனநாயக-புரட்சிகர கூட்டணிக்கும் இடையில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் ஒரு வரலாற்று நிர்பந்தம் இதோ ஆரம்பமாகிவிட்டது. எல்லாவித மன சஞ்சலங்களையும் விட்டொழித்து விட்டு சமரசமின்றி சிந்திக்க கோரி ஜனநாயக சக்திகளுக்கு இந்த கட்டுரையின் மூலம் அரைக் கூவி அழைக்கிறேன்.

இந்த அம்சத்தில் செயல்பட வேண்டிய தேவையை முன்னிட்டு முதல் முயற்சியாக இந்தியாவின் பெரிய பயங்கரவாதமாகிய பார்ப்பனியத்தின் பயங்கரவாதத்தையும், அரசு பயங்கரவாதத்தையும் அறிமுகப்படுத்தும் விதமாக இந்த தளத்தில் செய்திகள், விமர்சனக் கட்டுரைகள் இடம்பெறும். இந்த தளத்தில் பங்களிக்க விரும்பும் ஜனநாயக சக்திகள் இந்த பின்வரும் மெயில் ஐடியை தொடர்பு கொள்ளவும் - asuran@inbox.com. அல்லது இந்த பதிவில்(http://terrorinfocus.blogspot.com/) பின்னூட்டமிடவும். தகவல்களை பெயர் வெளியிட விரும்பாமலும் தரலாம். தகவல்களின் நம்பகத்தன்மை உத்திரவாதப்படுத்தப்பட்ட பின்பு வெளியிடப்படும்.

பிற சிறுபான்மை பயங்கரவாத நடவடிக்கைகளை விரிவாக பேசி துவேசம் பரப்ப பாசிஸ்டு ஊடகங்கள் இருக்கின்ற காரணத்தாலும், வேறு வெகுசன முதாலளித்துவ ஊடகங்கள் இந்த அம்சத்தில் விவாதத்தை முன்னெடுத்து சென்று மக்களிடம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி வருவதாலும் அவற்றிற்கு இங்கு முக்கியத்துவம் தேவைப்பட்டால் ஒழிய அளிக்கப்படாது.

Terrorfocus

1 comments:

அசுரன் said...

ஒரு அனானி புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் கூட்டணியென்றால் என்ன, அப்படியொன்றின் frontal organization எது, என்பது உள்ளிட்ட விசயங்களை விளக்கிக் கூற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா போன்ற நாடுகள் முதலாளித்துவ நாடுகள் இல்லை. இது ஒரு அரைக் காலனிய - அரை நிலபிரபுத்துவ நாடு. எனவே இங்கு உண்மையில் தேவைப்படுவது முதாலாளித்துவ புரட்சியே ஆகும். ஆனால் புரட்சி செய்யும் அளவு தேசிய முதலாளிகள் (வெள்ளையன் உள்ளிட்ட சிறு பெரு முதலாளிகள்) இல்லை என்பதால நாட்டை ஜனநாயகப்படுத்தும் அது போன்றதொரு புரட்சியை பாட்டாளி வர்க்கமே செய்ய வேண்டியுள்ளது. ஆக, இங்கு பாட்டாளி வர்க்கம் என்பது விவசாயிகள், தொழிலாளர்கள், குட்டி முதலாளீகள், பணக்கார விவசாயிகள், கூலி விவசாயிகள், தேசிய முதலாளிகள் உள்ளிட்ட பலரின் ஒட்டு மொத்த நலனுக்காக இவர்களின் பொது எதிரியை எதிர்த்து போராட தலைமை தாங்குகிறது.

இந்த ஜனநாயக சக்திகள் அமைப்பு வடிவில் எனில் - பெரியார் திக, மகஇக, சில விவசாய அமைப்புகள், தலித் அமைப்புகள், பீற பார்ப்ப்னிய எதிர்ப்பு அமைப்புகள், பொதுவாக இன்றைய அரசை புரிந்து கொண்டு மாற்று தேடும் குட்டிமுதலாளித்துவ அமைப்புகளான் - மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், பகுதி அளவிலான தன்னார்வ அமைப்புகள்.

இந்த கூட்டணியின்றி பாட்டாளி வர்க்க கட்சியான கம்யுனிஸ்டு கட்சி மட்டும் இந்தியாவில் புரட்சி செய்ய முடியாது. இப்படியொரு கூட்டணி இங்கு ஒவ்வொரு பிரச்சினைக்கேற்றவாறு ஏற்ப்படும் (எ-கா: வெள்ளையன், மகஇக, இன்னும் பிற அமைப்புகள் கூட்டு சேர்ந்து கோக்கையும், ரிலையன்ஸையும் எதிர்ப்பது).

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் இதர ஜனநாயக சக்திகளுடன் இனைந்து நடத்திய புரட்சியை இதன் ஒரு வகைமாதிரியாக எடுத்துக் கொள்ளலாம்.

நான் பொதுவாக புதியஜனநாயக புரட்சியை ஆதரிப்பவன் அதில்தான் தீர்வு உள்ளது என்றூ கூறி வருபவன். , பார்ப்ப்னியத்தை எதிர்ப்பவன். புரட்சிகர-ஜனநாயாக சக்திகள் மீது எங்கு அவதூறு வீசியடிக்கப்பட்டாலும் அதனை எதிர்ப்பவன்.

அசுரன்