தட்டுப்பாடில்லாத வரை எந்த ஒரு அடக்குமுறை வடிவத்தின் உண்மை முகமும் வெளித் தெரிவதில்லை. எல்லாம் கிடைக்கும் வரை இன்றைய குடும்ப என்கிற அடக்குமுறை வடிவம் கூட மிக இனிமையானதாகவே இருக்கிறது. ஏதாவது ஒரு விசயத்தில் தட்டுப்பாடு ஏற்ப்படும் போது அந்த அடக்குமுறை தனது உண்மை முகத்தை காட்டுகிறது போலியாக கிடைத்து வந்த சலுகைகளும், சுதந்திரமும் பறிக்கப்படுகிறது.
இதே நிலைதான் அரசு என்ற வடிவத்துக்கும். மறுகாலனியச் சூழலில் பிரச்சனைகள் பெருக பெருக மக்கள் ஆங்காங்கே நேரடியாக அரசுடன் யுத்தம் நடத்தி வருகிறார்கள். நேற்றைய காலங்களில் வழங்கப்பட்ட, நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகள் விதந்தோம்பி வரும் சொற்ப ஜனநாயக உரிமைகள் இன்றைய நெருக்கடியான நிலைகளை சமாளிக்க பெருத்த இடைஞ்சலாக அரசின் முன் வந்து நிற்கிறது. அந்த பேயரளவிலான உரிமைகளையும் குப்பைத் தொட்டியில் கடாசுகிறது அரசு.
போலி என்கௌண்டர்கள், மோசடி பேர்வழிகளைப் பற்றி மேடைப் போட்டு பேச தடை, வால் போஸ்டர் ஒட்டினால் தேசத் துரோக சட்டத்தில் கைது, மத நல்லிணக்கம் குறித்து பேசினால் அதற்க்கும் தடை, மக்கள் பிரச்சனைகளுக்கு போராடினால் பதிலுக்கு குண்டாந்தடிகளே வருகின்றன. இப்படி உருமாறி தனது சுயரூபம் காட்டி வரும் மறுகாலனியத்தின் இன்னுமொரு விளைவாக பின்வரும் விசயம் நடந்துள்ளது.
மருத்துவர் பினாயக் சென்(Binayak Sen) என்பவரை அவர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர் என்பதாக கூறி கைது செய்துள்ளது போலீஸ். சட்டிஸ்கரில் மிகவும் மதிக்கப்படும் ஒரு ஆளுமை இவர். சட்டிஸ்கரில் அவர் ஒரு முக்கியமான மனித உரிமை போராளி (PUCL), பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிக் கொண்டுவந்தவர். காவல் நிலைய மரணங்கள், போலி என்கௌண்டர்கள், பட்டினிச் சாவுகள், வயிற்றுப் போக்கு ஊட்டச் சத்து குறைப்பாடு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சனைகளை வெளி உலகின் பார்வைக்கு கொண்டு வந்தவர். சல்வாஜுடம் என்ற பெயரில் சட்டீஸ்கர் அரசு தனது சொந்த மக்கள் மீது ஏவிவிட்டுள்ள அடக்குமுறை போரின் கோர பக்கங்களை (கிராமத்தோடு மக்களை மிரட்டி நிவாரன முகாம்களில் அடைத்து வைப்பது, வீடுகள், நிலங்களை தீயிட்டு கொளுத்துவது முதல் பல்வேறு கொடுமைகள்) வெளிக் கொண்டு வந்ததில் முக்கியமானவர் இவர்.
அவரை கைது செய்த பின் அவருடைய வீட்டை சோதனையிட்ட போலீஸு அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு நோட்டிஸ்கள் சிலவும், மாதன் என்கிற மாவோயிஸ்டு தலைவரிடமிருந்து வந்த ஒரு கடிதமும் எடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ரய்ப்பூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மாவொயிஸ்டுகளின் படு மோசமான நிலையை எடுத்து கூறி அதற்க்கு PUCL மூலம் இந்த கொடுமைக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறது. அந்த கடித்ததில் அன்பு தோழர் பினாயக் சென் என்று குறிப்பிட்டிருந்ததுதான் பிரச்சனைக்கு காரணமே. இது தவிர்த்து 30 முறை நாராயன் சண்யால் என்ற மாவோயிஸ்ட் தலைவரை சிறையில் சென்று சந்தித்தார் இவர் என்பதுதான் இன்னொரு மிக முக்கிய குற்றச்சாட்டு.
பிரஃபுல் பிட்வய்(praful bidwai) என்பவர் இந்த குற்றச்சாட்டுகள் அடி முட்டாள்தனமானவை என்கிறார். "அரசு அதிகாரிகளின் அனுமதியுடன், ஜெயிலரின் மேற்பார்வையிலேயே சிறையில் இருந்த நாராயனை சந்தித்துள்ளார் சென். சிறையில் இருக்கும் ஒருவரை பார்த்து அவர்து அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவது சென்னிடைய சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒரு செயல்பாடே. அப்படியிருக்க 35 முறை பார்த்தார், 100 முறை பார்த்தார் என்ற கணக்கெல்லாம் அர்த்தமற்றது" என்கிறார்.
அமெரிக்க கோக்கே வெளியேறு என்று வால்போஸ்டர் ஒட்டினாலே தேசத் துரோகம் எனும் போது மாவொயிஸ்டுகள் தோழர் என்று விளித்து எழுதிய கடிதத்தை வைத்திருந்தால் அது உண்மையிலேயெ இந்த அரசின் வரையறைப்படி மரண தண்டனை கொடுக்க தகுந்த தேசத் தூரொகம்தான். அவர்களை சிறையில் சந்தித்தாலோ அதைவிட பெருத்த குற்றம். ஆயினும் 1947க்கு முன்பு நம்மை நேரடியாக ஆட்சி செய்த பிரிட்டிஸ்க்காரன் கூட இந்தளவுக்கு கடுமையாக தனது நலனை பேணிப் பாதுகாக்கவில்லை. அடிவருடி அரசோ தனது அடிமை சேவகத்தை ஓவர் ரியாக்ஸனாக வெளிப்படுத்துகிறது.
பாசிசம் முதலாளித்துவத்தின் உண்மை உருவம். அதுவும் முதலாளித்துவத்தின் உச்ச கட்டமான(கடைசி கட்டமல்ல) ஏகாதிபத்திய காலத்தில் பாசிசம் இன்னும் கோடூரமாக வெளிவருகிறது. 'எந்த ஒரு நாட்டையும் அடிமைப்படுத்தியுள்ள நாடு தன்னளவில் சுதந்திரமானதாக இருக்காது'. இந்த உண்மையும் வேறெந்த காலத்தையும் விட இன்றைய மறுகாலனியாதிக்க சூழலில் பேருண்மையாய் வெளி வருகிறது. ஏகாதிபத்திய நாடுகள் இந்தியா போன்ற நாடுகளில் தமது சுரண்டலை அதிகப்படுத்த அதிகப்படுத்த தமது சொந்த நாடுகளின் அவை வழங்கி வந்த ஜனநாயக உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருகின்றன. பதிலுக்கு இந்திய போன்ற நாடுகளோ ஏகாதிபத்திய சுரண்டலை எதிர்க்கும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க வசதியாக ஒவ்வொரு ஜனநாயக உரிமைகளையும் குழி தோண்டி புதைத்து வருகிறார்கள். இன்று இவர் நாளை அடிமைத்தனத்தை எதிர்க்கும் யார் வேண்டுமானாலும்.
அருந்ததிராயின் வார்த்தைகளில் சொல்வதென்றால், "இந்திய ஒரு போலீஸ் ராஜ்யமாக மாற இருக்கிறது. அங்கு நடப்பவற்றை ஏற்றுக் கொள்ளாத ஒவ்வொருவரும் பயங்கரவாதி என்று அழைக்கப்படும் அபாயம் உள்ளது..... பயங்கரவாதம் என்ற சொல்லாடலுக்கு எந்தவொரு தெளிவான விளக்கமும் கொடுக்காமல் விட்டு வைத்திருப்பதன் மூலம் அதன் அர்த்தம் மிகப்பரந்து விரிந்ததாக திட்டமிட்டே விடப்பட்டுள்ளது. நாமும் கூட வெகு விரைவில் மாவோயிஸ்டுகள் என்றோ நக்சலைட்டுகள் என்றோ, பயஙகரவாதிகள், பயங்கரவாதி ஆதரவாளன் என்றோ அழைக்கப்பட்டு முடித்துக்கட்டப்படும் நாள் வெகு தூரத்திலில்லை."
ஒரு அரைக்காலனியாக உள்ள இந்தியாவில் ஜனநாயகம் என்பது படித்த நடுத்தர வர்க்கத்திற்க்காவது கிடைத்து வந்தது. அதுவும் தற்போது தரகு அரசுக்கு பெருத்த இடைஞ்சாலாகி விட்டபடியால் கழட்டியெறியப்பட்டு கிழிந்த கோமணாய் அரைக் கம்பத்தில் தொங்கிறது. போலி சுதந்திர தினத்தன்று பறக்கவிடப்பட்ட மூவர்ணக் கொடியோ அரைக் கோமணத்தின் முடை நாற்றத்தில் மூச்சு திணறி தலை தாழ்ந்துள்ளது.
ஆக, அன்புள்ள வாசக பயங்கரவாதிகளே (பின்ன, தற்போதைய வரையறைப்படி பயங்கரவாதியினுடைய எழுத்துக்களை படிப்பவரும் கூட பயங்கரவாதிதானே) இந்த செய்தியை எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள். இமெயிலில் அனுப்புங்கள். இதுதான் இன்றைய இந்தியா, நாளைய இந்தியா....
TerrorinFocucs
நன்றி: அரசுபால்ராஜ்